‘இசை குறித்தும் எனக்குத் தெரியும்’ என்கிற தொனியில் - ‘இனி இளையராஜா எப்படி இசையமைக்க வேண்டும்’ என்று சொல்லுமளவிற்கு அ.மார்க்சின் அறியாமை, ‘தீராநதி’ கட்டுரையில் கொடிகட்டிப் பறந்தது. கூடவே திரித்தலும், பொய்த்தகவல்ககளும் இணையாகப் பறந்தன.எடுத்துக் காட்டாக, 'வேதம் புதிது போன்ற படங்களில் அவரின் சிறந்த திரை இசைகள் பல சமஸ்கிருத சுலோசங்களோடு குழைந்து வெளிப்பட்டதை மறந்து விட இயலுமா? இவற்றைக் கேட்கிற செவிகளுனூடாக ஏற்படுகிற உணர்வலைகள் எத்தன்மையானவை?' என்கிறார் அ.மார்க்ஸ்.1. 'வேதம் புதிது’ படத்தின் கதையமைப்புக்கு அப்படித்தான் இசையமைக்க வேண்டும். (‘கல்லூரி பாடத்திட்டம் பிற்போக்குத் தனமாக இருக்கிறது; அதை நான் போதிக்க மாட்டேன்’ என்று எந்த முற்போக்குப் பேராசிரியரும் முரண்டு பிடிப்பதில்லை.)2. அந்தப் படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா அல்ல. தேவேந்திரன்.கட்டுரையின் இன்னொரு இடத்தில், 'நாட்டுப்புற இசையைக் கூட அவர் சாஸ்திரியப் படுத்துகிறார். ''பாடறியேன்… படிபப்றியேன்… எனத் தொடங்கி ‘மரி மரி நின்னே’ என முடியும் அவரது புகழ் பெற்ற திரை இசை” என்கிறார் அ. மார்க்ஸ்.இளையராஜா மீதான இந்த அவதூறு அப்பட்டமான திரித்தலினால் வருவது. ‘பாடறியேன்… படிப்பறியேன்..’ என்கிற நாட்டுப்புறப் பாடலில் இருந்துதான் உங்களின் சாருமதி ராகம் வந்தது என்பதைதான் ‘மரி மரி நின்னே…’ வில் அவர் நிரூபித்தார்.தாழ்த்தப்பட்டவர், நிறைந்த பக்தியோடு கோயிலின் கருவறைக்குள் நுழைந்து, கடவுள் மீது கை வைக்க ஆசைப்பட்டது மாதிரி, மிகவும் புனிதமானது கர்நாடக சங்கீதம், தெய்வாம்சம் பொருந்தியது, அதில் ஒரு திருத்தம் கூட செய்யக் கூடாது?’ என்று சனாதனவாதிகள் கொண்டாடிய அதே வார்த்தைகளோடும், அதே பக்தியோடும் உள்ளே சென்று, அந்தப் புனிதத்தில் கை வைத்து - ‘இதில் புனிதமும் இல்லை, புண்ணாக்கும் இல்லை’ என்று தன் இசையால் அந்தப் புனிதத்தை நடுத்தெருவில் போட்டுடைத்தார் இளையராஜா.‘மரி மரி நின்னே…’ இந்தக் கீர்த்தனையை தியாகய்யர் காம்போதி ராகத்தில்தான் இயற்றி இருந்தார். ஆனால், இளையராஜா தன் அசாத்தியமான, துணிச்சலான இசைத் திறமையால், காம்போதியில் இருந்து ‘மரி மரி நின்னே…’ என்ற வார்த்தைகளை மட்டும் உருவி சாருமதியில் தான் உருவாக்கிய ராகத்தில் இட்டு நிரப்பினார்.ஆம், தியாகய்யரையே மெட்டுக்குப் பாட்டெழுத வைத்தவர் இளையராஜா. சனாதன ஆதரவாளர் என்று சொல்லப்படும் இளையராஜாவின் இந்தச் செயலுக்கு, அவரைக் கொலை செய்யும் அளவுக்கு கோபத்தில் இருந்தனர் சனாதனவாதிகள் எஸ்.என்.சுப்பையா நாயுடு, சுதர்சனம், ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், சங்கர்-கணேஷ், இப்படி எல்லா இசையமைப்பாளர்களும் திரை இசைப் பாடலை கர்நாடக சங்கீத அடிப்படையில் தான் அமைத்தார்கள். அதன் தொடர்ச்சியாகத்தான் இளையராஜாவும் அதைச் செய்தார்.
மேற்சொன்ன அனைவரும் கர்நாடக இசை மரபுக்குள்ளேயே அடக்கி வாசித்தவர்கள். இளையராஜா ஒருவர்தான் திமிறி நின்றவர்.
அது மட்டுமின்றி, ‘தோடி, காம்போதி போன்றவை மிகக் கடினமான, உயரிய ராகங்கள். அதை மிக எளிமையாக எவனாலும் கையாள முடியாது’ என்ற மிரட்டலோடு இறுமார்ந்த கூட்டத்தைக் கேலி செய்வதுபோல் அந்த ராகங்களை மிகச் சாதாரணமாகக் கையாண்டு அதில், பம்பை, உடுக்கை, பறை போன்ற தமிழ் இசைக் கருவிகளை மிக அதிக அளவில் பயன்படுத்தி, அந்த ராகங்களின் புனிதத்தைப் பார்த்துக் கை கொட்டிச் சிரித்தவர் இளையராஜா. இந்த கலகத்தை அவர் திட்டமிட்டுச் செய்யவில்லை. அவர் இசை அறிவின் இயல்பான உணர்வு அது.
எடுத்துக்காட்டாக, ‘எல்லாம் இன்பமயம்’ படத்தில், `மாம(ன்) ஊடு மச்சு ஊடு’ என்ற கானாப் பாடலை, மோகனமும்+சங்கராபரணமும் கலந்த பிலஹரி ராகத்தில் அமைத்திருப்பார்.
ஆரோகணம் - ச ரி க ப த ச்
அவரோகணம் - ச நி த ப ம க ரி ச
(ஸ்வர ஜதி இதன் சாகித்தியம் – ரா ர வேணு கோபாலா)
இவைகளோடு அந்தப் பாடலின் மய்யமாக ஓடுவது, `வெஸ்டர்ன் கிளாசிக்கல்’. இவை எல்லாவற்றையும் விட அந்தப் பாடலை ஆக்கிரமிக்கும் வாத்தியக் கருவிகள் எவை தெரியுமா? உறுமியும், பறையும்.
ஆம், யாரும் தொட அஞ்சுகிற இந்தக் கடினமான ராகத்தை ‘மாம(ன்) ஊடு மச்சு ஊடு…’ என்று சேரிகளில் இருந்து ஒலிபெருக்கி மூலமாக மச்சு வீட்டு சங்கீத வித்வான் காதில் விழுந்த போது, அவரின் புனிதம் எப்படி பொல பொலத்துப் போனது என்று அ.மார்க்சுக்கு தெரியுமா? இது போல் நிறைய எடுத்துக் காட்டுகளைச் சொல்ல முடியும். கர்நாடக இசையில் இனி புதிதாக செய்வதற்கு ஒன்றுமில்லை என்கிற அளவிற்கு அதைச் சக்கையாக்கி வீசியவர் இளையராஜா ஒருவர்தான்.
ஆம், அவர் மேற்கத்திய இசையில் நின்று கொண்டுதான் கர்நாடக இசையைக் குனிந்து பார்க்கிறார். அதனால் தான் அவர் உலகின் தலை சிறந்த கலைஞர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.
கர்நாடக இசையின் உச்சத்தைச் சென்று அதை உலுக்கிய பிறகும், இளையராஜாவை சாஸ்திரிய இசை மேதைகள் புகழ்கிறார்கள் என்றால், இளையாரஜாவை, ‘வம்புக்காகவாவது’ அவரது இசை குறித்து அவதூறு சொன்னால், ‘தனக்கு இசை பற்றி தெரியாது’ என்று ஆகிவிடுமோ என்கிற பயமே காரணம். உண்மை இப்படி இருக்க, `சனாதன இசையில் இளையாராஜா காணாமல் போய்விட்டார்’ என்பது கற்பனை மட்டுமல்ல, பித்தலாட்டமும் கூட.
`மணியே, மணிக்குயிலே…’ (நாடோடித் தென்றல்) என்கிற பாடல் பின்னுக்குச் சென்று ரஹ்மானின் `சின்னச் சின்ன ஆசை (‘ரோஜா’) முன்னுக்கு வந்தது. ரசிக மதிப்பீட்டில் ராஜாவின் வீழ்ச்சி இப்படியாக வெளிப்பட்டது. உண்மையிலேயே ஒரு புயலாக ரஹ்மானின் பிரவேசம் அரங்கேறியது” என்கிறார் அ.மார்க்ஸ்.
`சின்னச் சின்ன ஆசை’யோடு `மணியே மணிக்குயிலே’ பாடலை ஒப்பிடுவதே அபத்தம். மிக அற்புதமான உணர்வுகளைத் தரக்கூடிய உன்னதமான பாடல் `மணியே மணிக்குயிலே’. இந்தப் பாடல் இடம்பெற்ற படம் `ரோஜா’ திரைப்படம் அளவிற்கு ஓடவில்லை என்பதால், `சின்னச் சின்ன ஆசை’ அளவிற்கு `மணியே மணிக்குயிலே..’ பிரபலமாகவில்லை.
ஒரு பாடலின் வெற்றி என்பது, பிரபலமாவதில் மட்டுமில்லை. அப்படிப் பார்த்தால், தமிழ் நாட்டின் மிகப் பெரிய அறிவாளி ரஜினிகாந்தாகத்தான் இருப்பார்.
`சின்னச் சின்ன ஆசை…’ பாடலை ரஹ்மான், அ.மார்க்ஸ் விரும்புவது போல் ஜாஸ், புநூஸ், நாட்டுப்புறப் பாடல்கள் சாயலில் அமைக்கவில்லை. `ஹரி கம்போதி’ என்கிற சாஸ்திரிய சங்கீத அடிப்படையில்தான் அமைத்தார். வீணையும், கஞ்சீராவும் அதில் முக்கியமான கருவிகள். இதைத்தான் ‘ஒரு புயலாக ரஹ்மானின் பிரவேசம் அரங்கேறியது’ என்கிறார் அ.மார்க்ஸ்.
இளையராஜாவிற்கு எதிராக ரஹ்மானை நிறுத்துவது, இளையராஜாவிற்கு எதிராக தேவாவை ஒப்பிடுவது என்பது ஒரு இசை ஒப்பீடாக இல்லை. (அவருடன் ஒப்பிடுவதற்கு இங்கு ஒருவரும் இல்லை) அ.மார்க்சின் இந்த ஒப்பீட்டில் அரசியல் இருக்கிறது.
அந்தக் காலத்தில், டாக்டர் அம்பேத்காருக்கு எதிராக எம்.சி.ராஜாவை நிறுத்திய தொனியிலேயே இளையராஜாவுக்கு எதிராக தேவா.
இந்தக் காலத்தில், டாக்டர் கே.ஆர்.நாராயணனுக்கு எதிராக அப்துல் கலாமை நிறுத்திய தொனியிலேயே இளையராஜாவுக்கு எதிராக ரஹ்மான். இந்த அரசியல்தான் அ.மார்க்சின் ஒப்பீட்டில் ஒளிந்திருக்கிறது.
இதை நிரூபிப்பது போல், “உலகத் தரத்துக்கு ஒப்பிட்டுச் சொல்லத் தக்க அளவில் ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் முதலானோர் இசைக் கட்டுமானங்கள் அமைத்து அவற்றை வெகுசனப்படுத்தினர்” என்கிறார் அ.மார்க்ஸ்.
உண்மையில் ரஹ்மான் என்கிற புயல், தமிழ் மக்களின் மனதில் இசைப் புழுதியை வாரி இரைத்துவிட்டு கரை கடந்து போய் அய்ந்தாண்டுகளுக்கு மேலாகிறது. இந்த அய்ந்தாண்டில் ஒரு பாடல் கூட பிரபலமாகவில்லை. ஹாரிஸ் ஜெயராஜ் என்பவர், நான்கு படங்களுக்கு மட்டுமே இசை அமைத்திருக்கிறார். அதில் ஒரே ஒரு பாடல் மட்டும்தான் பிரபலம் (‘வசீகரா’)
உண்மை இப்படியிருக்க, இவர்களை `உலகத்தரத்துக்கு’ என்று பொய் சொல்கிறார்.
அ.மார்க்சே ஒரு ஒப்பீட்டை உண்டாக்குகிறார். அந்த ஒப்பீட்டிலும் அவர் நேர்மையாக இல்லை. இன்றைய திரை இசை நிலையில் வியாபார ரீதியாகவும், வெற்றி பெற்று நிறைய படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருப்பவர் யுவன் சங்கர் ராஜாதான் (இளையராஜாவின் மகன்.) அதன் பிறகு வித்யாசாகர். நிலைமை இப்படியிருக்க மறந்து ஓரிடத்தில் கூட, யுவன் சங்கர் ராஜாவின் பெயரைக் குறிப்பிடவில்லை. ஏன்?
இளையராஜாவின் பரம்பரையின் மீதே கோபமா?பின்குறிப்பு: “யாரையும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக நிறுத்துவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு புறம்பான ஒன்று. யாரையும் விமர்சனத்திற்குத் தகுதியற்றவர்களாக நிறுத்துவது இன்னும் மோசமான ஒன்று. விமர்சன அறிவு என்பது ஒரு மனித மாண்பு”என்று கட்டுரையில் ‘தலித் முரசு’க்கு அறிவுரை சொல்கிறார் அ.மார்க்ஸ்.
அதனால் அவரைப் பற்றியான இந்த விமர்சனங்களுக்கும் இதே அளவுகோலைப் பொருத்திப் பார்ப்பார் என்று நம்புகிறோம்.
No comments:
Post a Comment