Wednesday, August 5, 2009

மாவீரர்கள்



பிரிகேடியர் பால்ராஜ் (நவம்பர் 27, 1965- மே 20, 2008, இயற்பெயர்: பாலசிங்கம் கந்தையா, கொக்குத்தொடுவாய், முல்லைத்தீவு) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒரு முதுநிலைத் தளபதியாவார். தமிழீழத்தின் பல போர்க்களங்களை வழிநடத்தியவர். 1983 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார். 1991 ஆம் ஆண்டு தொடக்கம் 1993 ஆம் ஆண்டு வரையும் பின்னர் 1995 ஆம் ஆண்டு தொடக்கம் 1997 ஆம் ஆண்டு வரையும் விடுதலைப் புலிகளின் முதலாவது மரபுவழிப் படையணியான சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் முதலாவது கட்டளைத் தளபதியாக அப்படையணியை வழிநடத்தியவர். வரலாற்றுச் சிறப்புமிக்க 2000 ஆம் ஆண்டு ஆனையிறவுச் சமரில் முக்கிய பங்காற்றினார்.

அமைதிப் பேச்சுக்களின் போது 2003 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பால்ராஜூக்கு இருதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 2008 ஆண்டின் தொடக்கத்தில் 3 மாதங்கள் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். மே 20, 2008 இல் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் பால்ராஜ் சாவடைந்தார்.

மாவீரன் பால்ராஜ்! -

வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களே, “”என்னையும் விஞ்சிய போராளி” என வியந்து பாராட்டிய தளபதி ஒருவன் தமிழ் வரலாற்றில் இருந்தான்.
அவன் யாரெனத் தெரியுமா உங்களுக்கு? காலப் பெருவெள்ளத்தில் கரைந்திடாது மிளிரும் மார்க் அன்டணி, மாக்சிமுஸ், நெல்சன், வென்கியாப் போன்ற போர்ப்படைத் தளபதிகள்போல் சிங்களத் தளபதிகளைக் கூட வியக்க வைத்த போராளி அவன்!”.

உடலில் எத்தனை குண்டுகள், ஷெல் துண்டுகள் துளைத்து உள்ளிருந்தன என்று அவனுக்கே தெரியாது. 1993-ம் ஆண்டு இப்போதைய சிங்கள ராணுவ தலைமைத் தளபதி சரத் பொன்சேகா தலைமையில் ”யாழ்தேவி” எனப்பெயரிட்டு பெரும் எடுப்பில் யாழ்குடாவை கைப்பற்ற நகர்ந்த இராணுவத்தை புலோப்பளை பகுதியில் நேருக்கு நேர் எதிர்கொண்டு டாங்குகளையும், குண்டு துளைக்க முடியா கவச வாகனங்களையும் சிதறடித்து ஆறே நாட்களில் சிங்களப் பெரும்படைகளை வந்த வழிக்கே புறமுதுகிட்டு ஓடச் செய்தவன்.

அச்சமரில் கிரானேட் குண்டு அவனது ஒரு காலை சிதைத்து முறிக்க, காலை வெட்டி எடுத்தே ஆக வேண்டுமென கள மருத்துவர்கள் அறிவுறுத்த, சிங்களப் படைகளை விரட்டி முடிக்கும் வரை காலுக்குக் கட்டுப் போட்டுக் கொண்டே கட்டளைத் தலைமை தந்தவன்! பலநூறு இராணுவத்தினர் யாழ்தேவி சண்டையில் உயிரிழந்தார்கள், சரத் பொன்சேகாவும் காயமடைந்து தப்பியோடினார்.

எத்தனையோ இராணுவ வரலாறுகளைப் படித்திருக்கிறேன். எண்ணிலா தளபதியர்களின் போர்க்கள சாகசங்களை உள்வாங்கி வியந்திருக்கிறேன். ஆனால் அனைவரை விடவும் எனது ஆதர்சம் தமிழீழம்-முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத் தொடுவாய் கிராமம் தந்த இத்தளபதிதான்.

இரவு பகலென களப்பணியில் நின்ற அவனுக்கு இளவயதிலேயே சர்க்கரை நோய், இதயநோய். அமைதிப் பேச்சுவார்த்தை காலத்தில் 2003-ம் ஆண்டு நார்வே நாட்டின் ஏற்பாட்டில் சிங்கப்பூரில் வைத்து அவனுக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தது. அமெரிக்காவின் புகழ்பெற்ற தமிழ் மருத்துவர்கள் வந்திருந்து பெருமையுடன் அவனை சிங்கப்பூரில் பராமரித்தார்கள்.

சிகிச்சை முடிந்து கொழும்பு விமான நிலையம் வந்திறங்குகிறான் அவன். விமான நிலையத்திற்குள் நுழைந்ததுமே சுமார் 35 இளம் சிங்களத் தளபதியர்கள் முழு இராணுவச் சீருடையில் அவனை சூழ்கிறார்கள். சதி நடந்துவிட்டதோ என ஒரு கணம் அவன் திகைக்கிறான். நம்ப வைத்து கழுத்தறுத்துவிட்டார்களோ… என்ன செய்வது என எண்ணிக் கொண்டிருந்தபோதே தமிழ் தெரிந்த சிங்களத் தளபதி ஒருவர் அங்கு நிலவிய கனத்த அமைதியை தமிழும் ஆங்கிலமும் கலந்து உடைக்கிறார். ”பயப்படாதீர்கள் பால்ராஜ்… “வத்திராயன்-குடாரப்பு பாக்ஸ்’ சண்டை பிடித்த பால்ராஜை வாழ்க்கையில் எப்போதேனும் பார்க்கிற பாக்கியம் கிட்ட வேண்டு மென்று ஆசித்த இராணுவத் தளபதியர்களில் நாங்கள் சிலபேர். எங்கள் இராணுவத்தினருக்கு நீங்கள் ஒரு கனவு நாயகன், தெரியுமா உங்களுக்கு?” என்று அந்த சிங்களத் தளபதி கூற, இறுக்கம் அகன்று ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து உண்மையான இராணுவ மரபோடு அவரை வாழ்த்தியிருக்கிறார்கள்.

என்றேனும் ஒருநாள் என்னிடம் அந்த அளவுக்குத் தேவையான பணம் வருமெனில், அல்லது உணர்வாளர்களோ வர்த்தகத் தயாரிப்பாளர்களோ முன்வருவார்களெனில் மாவீரன் பால்ராஜ் நடத்திய “வத்திராயன்-குடாரப்பு பாக்ஸ்’ சண்டையை “ஹாலிவுட்’ திரைப்பட தரத்திற்கு தமிழ், ஆங்கில மொழிகளில் தயாரிக்க வேண்டுமென்பது என் வாழ்வின் ஆசைகளில் ஒன்று. பால்ராஜ் மட்டும் கேடு கெட்ட இத் தமிழ்ச் சாதியில் பிறக்காமல் அமெரிக்கனாகவோ, பிரித்தானியனாகவோ, யூதனாகவோ பிறந்திருந்தால் இன்று அவன் உலகம் போற்றும் போர்க்கள நாயகனாய் உயரம் பெற்றிருப்பான்.
அதென்ன அந்த வரலாற்றுச் சிறப்புமிகு “வத்திராயன்-குடாரப்பு பாக்ஸ்’ சண்டை? சுருக்கமாக முதலில் ஓரிரு வரிகளில் சொல்லிவிட்டு பின்னர் விரிவாக விளக்குகிறேன். கடல், சிங்கள கடற்படையின் கட்டுப்பாட்டில், வடக்குப்புறம் பலாலி இராணுவ தளமும் அத்தளத்தையொட்டி யாழ்குடாவில் நிற்கும் 20,000 இராணுவத்தினர், வடமேற்கில் பளை இராணுவ முகாமும் அங்கிருக் கும் சுமார் 7,000 ராணுவத்தினரும், தெற்குப்புறமாய் 14,000 இராணுவத்தினருடன் அசைக்க முடியா ஆனையிறவு முகாம், இவ்வாறாக கடற்படை, வான் படை, எறிகணைப் படை, பீரங்கிப் படை, தங்குதடையற்ற விநியோகம் இவற்றோடு சுமார் 40,000 இராணுவத்தினர் சூழ்ந்து நின்ற களத்தை வெறும் 1,500 போராளிகளுடன், சிறு ரக ஆயுதங்களோடு, விநியோக வசதியோ மீட்கப்படும் வாய்ப்போ ஏதுமின்றி, கடல்வழி ஊடறுத்து உள் நுழைகிறார் பால்ராஜ்.

வெட்டவெளி மணற்பரப்பு, மறைந்து நின்று தற்காத்து சண்டையிட மரங்களோ, புதர்களோ, பாறைகளோ, மணல் மேடுகளோ இல்லாத களம். அப்பரப்பில் “ப’, “ட’ வடிவில் எதிரியின் குண்டு மழைக்கு நடுவே பதுங்கு குழிகள் வெட்டி நிலையெடுத்து -இதைத்தான் “குடாரப்பு-பாக்ஸ் சண்டை” என்கிறார்கள்… அப்படி “ப’ “ட’ வெட்டிக் கொண்டே மெல்ல நகர்ந்து A9 நெடுஞ்சாலையை புதுக்காடு சந்திப்பில் இடைமறிக்கிறார்கள். எவ்வித பின்புல விநியோக ஆதரவோ, மருத்துவ உதவிகளோ, தப்பிக்கும் வாய்ப்போ இன்றி சிறுரக ஆயுதங்களுடனும், பிஸ்கட்-ரஸ்க்-ரொட்டி- வறுத்த மாவு- குடிநீர் என குறைந்த உலர் உணவுடனும் வெறும் 1,500 போராளிகள் -நான்கு படை அசுர பலத்தோடு நின்ற 40,000 இராணுவத்தினரை எதிர்கொண்டு அவர்களின் இதயப் பரப்பிலேயே நிலையெடுத்து -ஒன்றிரண்டல்ல 34 நாட்கள் -ஆனையிறவு முகாம் விழுகின்றவரை சண்டையிட்டார்களென்பது உலகின் வீர வரலாறுகள் இதுவரை அறியாத மெய்சிலிர்க்கும் அதிசயம். இது நடந்தது ஓயாத அலைகள்-3ன் இறுதிக் கட்டமான 2000-ம் ஆண்டில்.

2002-ல் நான் வன்னி சென்றிருந்தபோது தமிழ்ச்செல்வன் அவர்களிடம் வைத்த முதன்மையான வேண்டுகோள் இதுதான்: “”திரும்பிச் செல்லுமுன் தலைவரையும், தளபதி பால்ராஜையும் நான் பார்க்க வேண்டும், பார்த்தே ஆக வேண்டும், பார்க்காமல் நாடு திரும்பப் போவதில்லை”. பால்ராஜ் அவர்களை நான் சந்தித்தது முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில். மருத்துவ ஓய்வில் இருந்தார்.

எளிய மனிதனாய், சாரம் கட்டிக் கொண்டு, மரப்பலகையில் போர்வை விரித்து படுத்திருந்தார். ”சிகிச்சையின் போதேனும் மெத்தையில் படுக்கக்கூடாதா, இது சமாதான காலம்தானே…?” என்றேன். சிரித்தார். ”பழகினால் அதையே உடலும் மனசும் தேடும். இப்படியே இருந்துவிட்டால் போர்க்களத்தில் சுகம்” என்றார்.

வேரித்தாஸ் வானொலியில் பல புத்தகங்களிலிருந்து கடன் வாங்கி நான் படைத்த நிகழ்ச்சிகளைக் கேட்டு, இயல்பிலேயே நான் பெரிய அறிவாளியாக இருக்க வேண்டுமென கற்பிதம் செய்து கொண்டு, என்னிடம் கேட்டு தெளிவு பெறவென, மாசில்லா மாணவன் போல், 49 கேள்விகளை கசங்கிய தாளில் எழுதி வைத்து, அறிந்து கொள்ளும் தீரா ஆர்வத்துடன் வினவிக் கொண்டிருந்த பால்ராஜை எப்படி நான் மறப்பேன்!

“இத்தாவில்”, “வத்திராயன்-குடாரப்பு பாக்ஸ்’ சண்டை அனுபவத்தை கேட்டறியத்தான் வந்தேன்” என்றேன். ஊர்த்திருவிழாவில் சலங்கை கட்டி கரகமாடும் நடன மணியைப் போல், உருண்டு புரண்டு ஓடும் அருவியைப் போல் கதை சொல்லத் தொடங்கினார் பால்ராஜ்.

”மூன்று ஆண்டுகளுக்கு முன்னமே தலைவர் வரச்சொல்லி “பால்ராஜ் இத்தாவில்-தாளையடி- வத்திராயன் -குடாரப்பு பக்கமாய் போய் ரெக்கி பார்த்திட்டு வா’ என்றார். (”ரெக்கி’ என்றால் தகவல்கள் சேகரிப்பது, உளவுச் செய்திகள் திரட்டுவது). எனக்கு ஒன்டுமே விளங்கவில்லை. ஏனென்டா தாளையடி, வத்திராயன்,குடாரப்பு பகுதிக்கு இராணுவ முக்கியத்துவம், எதுவும் இல்லை. தொடர்ந்தும் தலைவர் சொன்னார். “கவனமா பார்த்து வா பால்ராஜ்… யாழ்ப்பாணத்துக்கான சண்டை அங்கேதான் தொடங்கும்’. அப்போகூட எனக்கு எதுவுமே விளங்கலெ. நானும் போய் ரெக்கி எடுத்தேன். கடல் மணலைத் தவிர வேறொன்டும் அங்கெ இல்லெ. அப்பவும் தலைவர் விபரம் எதுவும் சொல்லெயிலெ”.

மூன்று வருஷத்துக்குப் பிறகு ஓயாத அலைகள் 3 நடக்கேக்க தலைவர் வரச் சொன்னார். “”பால்ராஜ், ஆனையிறவுக்கான சண்டையெ நீதான் நடத்தப் போறெ’ என்றார். “”நீ பெரிய வீரன், பால்ராஜ். எத்தனையோ சோதனைகளெ உனக்கு நான் தந்திருக்கேன். எல்லாத்திலெயும் நீ வென்றாய். இது கடைசியா நான் உனக்கு வைக்கிற சோதனை. உன்னையும் 1,500 போராளிகளையும் தாளையடி கடற்பக்கம் சூசை தரையிறக்கி விடுவான் அவ்வளவுதான். சிக்கலென்டா உங்களை காப்பாற்றிக் கொண்டு வரக்கூட எங்களாலெ வர ஏலாது. நீ A9 நெடுஞ்சாலையை இடைமறிச்சு யாழ்ப்பாணத்திலிருந்து ஆனையிறவுக்கு வர்ற விநியோகத்தை வெட்டி முறிக்கணும். அதைச் செய்தா ஆனையிறவு தானா விழும். நீ உண்மையான வீரனென்டா ஆனையிறவெ விழ வச்சு நீ அந்தப் பக்கத்திலிருந்து 9 ரோட்டுலெ ஆனையிறவெ நோக்கி வர, நான் கிளிநொச்சியிலிருந்து இங்காலெ பக்கமா வர ரெண்டுபேரும் ஆனையிறவிலெ கை குலுக்கலாம்” என்றார்.

2000, மார்ச் 18-ந் தேதி சீறிப்பாய்ந்த கடற்புலிகளின் படகுகள் 1500 போராளிகளையும் தளபதி பால்ராஜையும் தாளையடி-குடாரப்பு- செம்பியன்பற்று கடற்பரப்பில் தரையிறக்கம் செய்யும் போதே கடும் சண்டை தொடங்கிற்று. விடுதலைப்புலிகள் போன்றதொரு அமைப்பு எதிரிப்படையை எதிர்கொண்டு ஒரே நேரத்தில் இத்தனைபேரை தரையிறக்குவதென்பதே மிகப்பெரிய சாதனை எனப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் ஆசிய பிராந்தியத்தில் நடந்த மிகப்பெரிய கடல்வழித் தரையிறக்கம் இது என ராணுவ ஆய்வாளர்கள் அப்போது வியந்தார்கள்.

பால்ராஜ் தொடர்ந்தார். “”இறங்கேக்கெயே கடும் சண்டை… சக்கை அடி அடிச்சான்… நாங்கள் மெதுவா நகர்ந்து வத்திராயனிலெ பாக்ஸ் வெட்டி நிலையெடுத்தம். சண்டையென்டா இதுதான் சண்டை ஃபாதர். குளிக்க ஏலாது, சப்ளை இல்லை… வெட்டி நிற்கும் குழிக்குள்ளெதான் சமையல், சாப்பாடு, தூக்கம் எல்லாம். காயம்பட்ட போராளிகளெ அதே குழிக்குள்ளே பராமரிக்க ணும். வீரமரணம் தழுவிய போராளிகளெ வணக்கத்தோட விதைக்கணும்… விமானத்தாலெ அடிப்பான்… டாங்கு கொண்டு அடிப்பான்… எறிகணை அடிப்பான்…”

“”என்ட ராசா… பழைய தமிழ் இலக்கியங்கள்லெ படிப்பம்தானே ஃபாதர், “இன்டு போய் நாளெ வா’ என்டு… அதுபோலத்தான் வத்திராயன் சண்டையும். வத்திராயன் இண்டைக்கு 400 மீட்டர் அவன் பிடிச்சா, நாளை 600 மீட்டர் நாங்க பிடிப்பம். அவன் 10, 20 டாங்குகளை வேகமா கலச்சுக் கொண்டு எங்களெ குழிக்குள்ளேயே உயிரோட புதைக்கலாமென்டு வருவான்… நாங்க பாய்ஞ்சு அவன் டாங்குகள் மேலெ ஏறி சுட்டுப்போட்டு அதே டாங்குகளெ திருப்பி நாங்க ஓட்டி அவனையே அடிப்பம். ஹாலிவுட் யுத்த படங்கள் பார்த்திருப்பிங்கதானே… அப்பிடித்தான் சண்டை நடந்தது.”

“”ரெண்டுநாள்… எட்டுநாள்… பத்துநாள்… சப்ளை துப்புரவா இல்லாத நிலை… கொண்டு வந்த சாமானெல்லாம் தீருது… சாப்பாடு தட்டுப்பாடு, சிங்கள ஆமிக்காரர்களெ பாய்ஞ்சு பிடிச்சு அவங்கட ஆயுதங்களெ எடுத்து சண்ட பிடிச்சம்… என்ட ராசா… சண்டையென்டா இதுதான் சண்டை…” -அப்படியொரு ரசனையுடன் வத்திராயன் பாக்ஸ் சண்டையை வருணித்தார் பால்ராஜ்.

வத்திராயனில் நிலை நின்று வரலாற்றுச் சமராடி, மெல்ல நகர்ந்து புதுக்காடு சந்திப்பு பகுதியில் A9 நெடுஞ்சாலையை இடைமறித்தார்கள். பல்லாயிரம் இராணுவத்தினரை அணி திரட்டி மீண்டும் மீண்டும் சிங்கள இராணுவம் முயன்ற முன் நகர்வுகளை நினைத்துப் பார்க்க முடியாத இதிகாச வீரம் காட்டி முறியடித்தனர் பால்ராஜின் போராளிகள். A9 நெடுஞ்சாலை வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து ஆனையிறவு முகாமில் இருந்த 14000 ராணுவத்தினருக்கு உணவு, ஆயுத விநியோகம் தடைபட்டது. இன்னொரு முனையில் ஆனையிறவுக்கு குடிநீர் வழங்கிய பரந்தன் பகுதியையும் புலிகளின் பிறிதொரு படையணி கைப்பற்ற, பால்ராஜும் 1500 போராளிகளும் குடாரப்பில் தரையிறங்கிய 34-ம் நாள், 2000 ஏப்ரல் 22-ம் நாள் ஆனையிறவு முகாம் விழத்தொடங்கியது. ஏப்ரல் 23-ம் தேதி ஆனையிறவு விடுதலைப்புலிகளின் முழுக் கட்டுப்பாட்டில் வந்தது.

பிரபாகரனும், பால்ராஜும் தங்களுக்குள் செய்துகொண்ட வரலாற்றுச் சபதம் நிறை வேறியது. புதுக்காடு சந்திப்பிலிருந்து வந்த பால்ராஜும் கிளிநொச்சியிலிருந்து வந்த பிரபாகரனும் ஆனையிறவில் கை குலுக்கினார்கள். ஆனால் பொதுவாக சிறு வெற்றிகளுக்கே தாராளமாய் பாராட்டி மகிழும் பிரபாகரன் ஒரு வார்த்தைகூட பால்ராஜிடம் சொல்லவில்லை. அமைதியாக ஒரு நிமிடம் பால்ராஜையே பார்த்தவர்… ”என்ன பால்ராஜ், நான் ஒண்டும் பாராட்டிச் சொல்லெலியே என்டு யோசிக்கிறியா. இந்தா கேள் உன்ட எதிரி உன்னைப் பற்றி என்ன சொல்றா னெண்டு? எனக் கூறிக்கொண்டே ஒரு “வாக்மேன்’ (ரஹப்ந்ம்ஹய்) பிளேயரையும் குறுந்தகடையும் கொடுத்திருக்கிறார். யாழ்ப்பாணப் படைகளின் கட்டளைத் தளபதி ஹெட்டியாராட்சிக்கும் அப்போதைய இராணுவ மந்திரி அனுருத்த ரத்வத்தேக்கும் வதிரையன் பாக்ஸ் சண்டையின் இறுதிக் கட்டத்தில் நடந்த காரசாரமான உரையாடலை தனது கட்டளை மையத்தில் இருந்துகொண்டு பதிவு செய்திருக்கிறார் பிரபாகரன்.

ஆனையிறவு விழக்கூடும் என்ற நிலையில், அது தென்னிலங்கையில் பெரும் அரசியல் கொந்தளிப்பை உருவாக்குமென்ற அச்சத்தில் பலாலி இராணுவத் தளத்திற்கு பறந்து வருகிறார் இராணுவ மந்திரி ரத்வத்தே. அங்கிருந்து தளபதி ஹெட்டியாராட்சியை காய்ச்சி எடுக்கிறார். ”வேசி மகன்களே… 40,000 பேர் படையைக் கொண்டு, சப்ளை இல்லாமல் சண்டையிடும் 1500 பேரை சமாளிக்க முடியாத நீங்களெல்லாம் ஒரு இராணுவமா? த்தூ…” இப்படிச் சொல்ல முடியாத அசிங்க வார்த்தைகளால் அர்ச்சிக்கிறார். எல்லாம் கேட்டுவிட்டு ஹெட்டியாராட்சி பொறுமையாகச் சொன்ன பதில் ”ஐயா பிரபாகரன் நேரா வந்து சண்டையிட்டாக் கூட சமாளிச்சிடுவேன். வந்திருப்பது பால்ராஜ். அவன் வந்து உட்கார்ந்தானென்றால் கிளப்ப முடியாது” -இந்த உரையாடலைத்தான் பதிவு செய்து பால்ராஜுக்கு கொடுத்தார் பிரபாகரன். “”உன்ட எதிரியே உன்னெ இப்படி பாராட்டியிட்டான். இதுக்கு மேலெ நான் என்ன சொல்றதாம்? வெண்டுட்டெ பால்ராஜ்” என்று சொல்லிக்கொண்டே பாசமுடன் கட்டித் தழுவிப் பாராட்டினாராம் பிரபாகரன்.

1996 ஓயாத அலைகள் 1-ன் போது இதே முல்லைத்தீவில் சிங்களப் படைகளை துவம்சம் செய்து துரத்தியடித்த பால்ராஜ், 1998 ஓயாத அலைகள் 2-ல் மின்னல் வேகத் தாக்குதலில் கிளிநொச்சி இராணுவ முகாமைத் துடைத்தெறிந்து புலிகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பால்ராஜ், 2000-ல் ஆனையிறவை வீழ்த்திய பால்ராஜ், அதன் பின்னர் இறுதியாக ஆனையிறவை மீளக் கைப்பற்ற சந்திரிகா அரசு 2001-ல் மேற்கொண்ட “அக்னிஹேலா’ பெரும் எடுப்பை எதிர் கொண்டு தகர்த்தெறிந்த பால்ராஜ், 43-ம் வயதில் 2008 -கடந்த ஆண்டு மே 23-ம் நாள் மாரடைப்பால் மரணமடைந்தார்.
thnnx santravathana.

No comments: