கராச்சி : பாகிஸ்தானில், ஒவ்வொரு மாதமும், 20 முதல் 25 இந்துப் பெண்கள் கட்டாயமாக இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்படுவதாக, அந்நாட்டு மனித உரிமைகள் கமிஷன் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் கராச்சி நகர் அருகில் உள்ள சுக்கூர் என்ற பகுதியைச் சேர்ந்த, 18 வயது ரிங்கிள் குமாரி என்ற இளம்பெண், கட்டாயமாக மதம் மாற்றப்பட்டு, பர்யால் என இஸ்லாமியப் பெயரிடப்பட்டதாக, செய்திகள் வெளியாயின. இதன் பின்னணியில், பாக்., பார்லிமென்ட் எம்.பி., ஒருவர் இருப்பதாகக் கூறப்படுகிறது.குமாரியின் குடும்பத்தார், மிரட்டல்களுக்கு அஞ்சி, லாகூருக்குச் சென்று போராடி வருகின்றனர். குமாரி, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்பும் கூட, அவர் கடத்தப்பட்டு, கட்டாய மத மாற்றத்திற்கு ஆளாகியிருப்பதாக, குமாரியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். தற்போது, இவ்வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.இதையடுத்துத் தான், பாகிஸ்தானில் கட்டாய மத மாற்றத்திற்கு ஆளாகும் பெண்கள் பற்றி, வெளியுலகுக்குத் தெரியவந்தது.
இதுகுறித்து, பாக்., மனித உரிமைகள் கமிஷனைச் சேர்ந்த அமர்நாத் மோட்டுமெல் என்பவர் கூறியதாவது:ஒரு மாதத்தில், 20 முதல் 25 இந்துப் பெண்கள் கட்டாயமாக மதம் மாற்றப்பட்டு வருகின்றனர். இவர்களில், 18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் மட்டுமல்லாமல், மணமான பெண்கள், குழந்தைகள் பெற்ற பெண்கள் கூட தப்ப முடிவதில்லை.பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மட்டும் மிரட்டலுக்கு ஆளாவதில்லை. எப்போதெல்லாம், ஒரு இந்துப் பெண் அல்லது அவளது குடும்பத்தார் கோர்ட்டில் ஆஜராகின்றார்களோ, அப்போதெல்லாம், சில மத அமைப்புகள் நூற்றுக்கணக்கில் ஆட்களைத் திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, சம்பந்தப்பட்ட குடும்பத்தவரை நெருக்கடிக்கு உட்படுத்தி, பீதியை ஏற்படுத்துகின்றன.
ரிங்கிள் குமாரியை மீட்க வேண்டும் என, அதிபர் சர்தாரி உத்தரவிட்டுள்ளார். ஆனால், இவ்விவகாரத்தில் இதுவரை எவ்வித முன்னேற்றமும் இல்லை.இவ்வாறு அமர்நாத் தெரிவித்தார்.
மனித உரிமைகள் கமிஷனின் அதிகாரப்பூர்வ பேராசிரியர் பதர் சூம்ரோ கூறுகையில், இந்து சமூகம் மத்தியில், பாதுகாப்பு உணர்வை அதிகரிக்கும் வகையில், சட்டங்கள் அமலாக்கம் செய்யப்பட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment