Sunday, July 19, 2009

தோழர் எம்.ரிஷான் ஷெரீப் அவர்களின் அழகு பதிவு ,

ஒரு இளங்காலை வேளை. குதூகலமாக இரை தேடி, தாழப் பறந்த குருவியொன்று காரில் அடிபட்டுக் கீழே விழுந்தது. அது என்ன சக மனிதனா, இடித்தவர் இறங்கி வந்து காப்பாற்ற அல்லது உதவ ? (இக் காலத்தில் மனிதனுக்கும் இதே நிலைதான் என்பது வேறு விடயம்)
விழுந்த குருவியால் எழுந்து பறக்க முடியவில்லை. வீழ்ந்து தவிப்பதை சக குருவியொன்று கண்டது. அருகில் வந்து பார்த்தது. ஏந்திப் பறக்கும் எண்ணம் உதித்திருக்குமெனினும் அதனால் முடியவில்லை. செய்வதறியாது துடித்த ஜீவனைத் தனியே விட்டு குருவி பறந்தது. இரையெடுத்து வந்து, தன் அன்பையும் நேசத்தையும் அரவணைப்பையும் ஒன்றாகக் கலந்து மருந்தெனக் குருவிக்கு ஊட்டியது.
மீண்டும் இரையெடுத்து வந்து பார்த்தபொழுதில் உயிரெனக் கலந்தது விட்டுப் போயிருந்தது. அதை உணராச் சக குருவி, கண்ணீர் தளும்பா விழிகளைக் கொண்ட ஒற்றைக் குருவி தனக்குள் அழுதது. தன் சிறு கால்களால் தட்டித் தட்டி எழுப்பியது. குருவி எழவில்லை.

சலனமற்ற குருவியை விட்டும் பறந்து போன உயிருக்குக் கூடக் கேட்கும் வண்ணம் சக குருவி அழைத்தது, அழுதது, அலறியது, மன்றாடியது. எதையும் அறியாச் சடலம் காற்றுக்கு மட்டும் சிறு இறகசைத்தபடி வீதியிலே கிடந்தது.







ஆசையாசையாய்ச் சேமித்த வாழ்வின் கனவுகள் நடுவீதியில் கலைந்துபோயிற்று. இரை தேடிப் பறக்கும் எண்ணமின்றி, தன் கூட்டத்தைத் தேடியலையும் எண்ணமின்றி தனது எந்த ஆர்ப்பரிப்புக்கும் இறுதி வரை எழாக் குருவியின் அருகிலேயே உயிர்க்குருவி மௌனித்து அமர்ந்தது...





ஒவ்வொரு மனிதனுக்கும் உங்களுக்குப் போன்றே, பெற்றெடுத்து, அன்பு செலுத்தி வளர்த்த தாயொருத்தி இருப்பாள். ஒவ்வொரு மனிதனுக்கும் உங்களுக்குப் போன்றே ஒரு வாழ்க்கை இருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் உங்களுக்குப் போன்றே அவ் வாழ்க்கையில் எப்படியெல்லாம் வாழவேண்டுமென்ற ஆசைகளும் கனவுகளும் இருக்கின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் உங்களுக்குப் போன்றே வாழும் உரிமையும் இருக்கின்றது.



No comments: